×

நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி வீடியோ பரப்புகின்றனர்: காங். மீது மோடி தாக்கு

சதாரா: ‘பாஜ அரசை நேரடியாக எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை பரப்புகின்றனர்’ என பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் காரத் பகுதியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய பேச்சுக்களையும், அமித்ஷா, ஜே.பி.நட்டா போன்ற தலைவர்களின் பேச்சுக்களையும் திரித்து சமூகத்தில் மோதலை உருவாக்க எதிர்க்கட்சியினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை பரப்புகின்றனர். இது ஆபத்தை உருவாக்கக் கூடியது.

அதுபோல நீங்கள் ஏதேனும் போலி வீடியோக்களை கண்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளனர். எனவே இதுபோன்ற போலி வீடியோக்களில் இருந்து சமூகத்தை காப்பாற்றுவது எங்கள் பொறுப்பு. போலி வீடியோக்களுக்கு பின்னால் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, அரசியலமைப்புக்கு எதிராக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மாற்ற அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த மற்றொரு பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு மகா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கு ஒவ்வொரு பிரதமர் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாதிரி நாடு இயங்க முடியுமா? உண்மையில் அவர்கள் நாட்டை வழிநடத்த விரும்பவில்லை. ஊழல் செய்யவே விரும்புகின்றனர். நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் தோற்கடிப்பட்டதை அறியாமல், கறைபடிந்த காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற கனவு காண்கிறது’’ என்றார்.

The post நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி வீடியோ பரப்புகின்றனர்: காங். மீது மோடி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Kong ,Modi ,Satara ,BJP government ,Karat ,Satara district ,Maharashtra ,Congress ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு;...